கெக்கரி

கியுகுமிஸ் சற்றைவஸ்

Cucumis sativus

குடும்பம் - குக்கர்பிற்றேசி

மிகவும் பிரபல்யமான மரக்கறியாகும். பாரம்பரியமாக சமைத்தோ அல்லது பச்சையாகவோ உண்ணப்படுகின்றது. இதனை குருநாகல், மாத்தளை, அம்பந்தோட்டை,போன்ற மாவட்டங்களில் நன்கு வளர்க்கலாம்.

பொருத்தமான காலநிலை

1000 மீற்றர் வரையான உயரமுள்ள பிரதேசங்களில் கெக்கரியைச் செய்கை பண்ணலாம். ஈரவலயத்தில் வருடம் முழுவதிலும் பயிரிடலாம். உலர் வலயத்தில் காலபோகத்தில் நடுகை செய்யலாம். வெப்பமான சூழலை விரும்பும் பயிராகும். பயிர் செய்யப்படும் இடங்களின் சராசரி வெப்பநிலை 30 பாகை சென்ரிகிறேற் ஆக இருப்பது உகந்தது.

மண்

பல்வேறு தன்மை கொண்ட மண்ணுள்ள இடங்களில் கெக்கரியை செய்கை பண்ணலாம். நன்கு நீர் வடிகின்ற, சேதன உக்கல் நிறைந்த, பீ. எச் மட்டம் 5.5 - 7.5 வரை உள்ள மண் செய்கைக்கு உகந்தது. நீர் தேங்கி நின்றால் பயிர் பாதிக்கப்படும்.

நிலப்பண்படுத்தல்

களைகளை அகற்றி 30 x 30 x 30 ச.மீ அளவுள்ள நடுகைக் குழிகளை சராசரியான இடைவெளியில் வெட்டிக் கொள்ளுக. ஒவ்வொரு குழிக்கும் 3 கி.கி சேதனப் பசளைவிட்டு மேல் மண்ணால் நிரப்பி, இரண்டையும் நன்கு கலந்து தரை மட்டத்தை விட 10 ச.மீ உயரமாக இருக்கும்படி குவித்துவிடவும்.

சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கம்

எல்.வை - 58

கறுப்பு முள் மயிர் கொண்ட மஞ்சள் பழங்கள். நடுத்தர பருமனுள்ளவை. உருளை வடிவானவை.

சம்பியோன் - காய்கள் நீளமானவை நட்டு 35 நாட்களில் பூக்கும்

மாகந்துர தெரிவு - வெண்பச்சை நிறமானது

தேவையான விதை

ஹெக்டயரொன்றிற்க்கு ஒரு கி.கி. ஒரு கிராமில் 30 - 40 விதைகள் உள்ளன.

நடுகையும், நடுகை இடைவெளியும்

தனிப் பயிராயின் 1 x 1 மீற்றர், வெண்டிப் பயிருடன் இதனைக் கலந்து பயிரிடலாம். 120 x 90 ச.மீ இடைவெளியிலுள்ள நடுகைக் குழிகளில் இரண்டு பயிர்களின் விதைகளையும் நடவும்.

ஐதாக்கல்

முளைத்து 2 வாரங்களின் பின்பு. ஒவ்வொரு குழியிலும் 2 நாற்றுக்களை விட்டு மேலதிகமானவற்றை அகற்றவும்.

பசளை இடல்

யூறியா

கி.கி / ஹெ

முச்சுப்பர் பொசுபேற்று

கி.கி / ஹெ

மியுறியேற்றுப்

பொட்டாசு கி.கி / ஹெ

அடிக்கட்டுப் பசளை

75

200

65

விதை முளைத்து 2 வது வாரம்

75

-

65

விதை முளைத்து 5 வது வாரம்

75

-

65

களைக்கட்டுப்பாடு

பயிர் நிலத்தை முற்றாக மூடும் காலம் வரை களைகள் தொடர்பாக கவனம் செலுத்தவும். வைக்கோல் அல்லது உலர் புற்களால் பத்திரக் கலவையிடல் மூலம் களைகளைக் கட்டுப்படுத்துவதுடன், தரமான பழங்களையும் பெறலாம்.

நீர்ப்பாசனம்

களைகளைக் கட்டுப்படுத்தவதற்கும், நீரைப் பாதுகாப்பதற்கும், தரையை வைக்கோலால் மூடி பத்திரக் கலவையிடுதல் நல்லது. மண் எப்போதும் வயற் கொள்ளளவில் பேணப்பட வேண்டும். தரையை
வெள்ளப்படுத்தி, கொடிகளை அல்லது பழங்களை மூழ்கச் செய்வதனால், கொடிகளிலும், பழங்களிலும் பழ அழுகல் ஏற்படக்கூடும். மேடைகளுக்கு இடையிலுள்ள காண்கள் வழியே ஓடும் நீர் நடுகைக் குழிகளை மட்டுமே ஈரமாக்க வேண்டும்.

மகரந்தச் சேர்க்கை

பூக்கள் பிரதானமாக தேனீக்கள் மூலமே மகரந்தச் சேர்க்கை அடையும். ஆண்பூக்கள் தோன்றிய பின்னரே காய்களைத்தரும். பெண்பூக்கள் உருவாகும். அதிகளவான வெப்பநிலை, நீண்ட பகற்பொழுது உள்ள போது பூக்கள் பிந்தியே உருவாகும்.

பீடைகளைக் கட்டுப்படுத்தல்

அவுலகபோரா வண்டு

வளர்ச்சியடைந்த வண்டினால் இலைகள், பூக்கள் என்பன உண்ணப்படும். இதனால், இளம் நாற்றுக்கள் முற்றாகவே அழிந்துவிடும். இதேபோல் நாற்றுக்கள் இளமையானதாக இருக்கும்போது குடம்பிகளாலும் பாதிக்கப்படும்.
காபறில் 85% போன்ற சிபாரிசு செய்யப்பட்ட பூச்சிநாசினியை தேவையான போது மாத்திரம் 2 வாரங்களுக்கொரு தடவை விசிறவும்.

எபிலக்னா வண்டு

வளர்ச்சியடைந்த வண்டும், குடம்பியும் இலைகளை உண்ணும் ரைக்குளோபோன் (டிப்டரெக்ஸ் 50%) .என்ற நாசினியை சிபாரிசு செய்யப்பட்டவாறு விசிறவும்.

பழ ஈ

குடம்பிகள் பழத்தின் உட்புறம் சேதம் விளைவிப்பதால், அவை அழுகும். கூட்டுப்புழுக்களை அழிக்க மண்ணைக் கிளறிவிடவும். பாதிக்கப்பட்ட கொடிகளைத் தோட்டத்திலிருந்து அகற்றி அழித்துவிடவும். பென்தியோன் 50% பூச்சிநாசினியை பூக்கள் உருவாகும்போது 2 வாரங்களுக்கு ஒரு தடவை பயிர்களுக்கு விசிறவும். நீருடன் கலந்த பூச்சிநாசினிக் கலவையின் ஒவ்வொரு லீற்றரிற்கும் 25 கிராம் சீனி வீதம் சேர்க்கவும்.

சிவப்புச் சிற்றுண்ணி

சாற்றை உறிஞ்சிக் குடிப்பதால் இலைகள் பச்சை நிறம் குறைந்து, கபில நிறமாகி, இலகுவில் உதிர்ந்து விழும்.
டைமீதோவேற் 40% ஐ சிபாரிசு செய்யப்பட்டவாறு விசிறவும்.

அழுக்கணவன், வெண் ஈ

சித்திர வடிவ நோயைப் பரப்பும் காவிகளாகும். நோயால் பாதிக்கப்பட்ட தாவரங்களைப் பிடுங்கி அழிக்கவும். டைமீதோவேற் 40% என்னும் பூச்சி நாசினியை 2 வாரங்களுக்கொரு தடவை விசிறவும்.

நோய்கள்

கீழ் பூஞ்சண நோய்

மழை காலத்தில் ஏற்படும் ஆபத்தான நோயாகும். நோய் அதிகமாகும் போது இலை உதிரும். முக்கோண வடிவான, மஞ்சள் புள்ளிகள் இலைகளில் தோன்றும். பின் இலைகள் கபில நிறமடையும். சாம்பல் நிற வித்தித்திணிவுகள் இலைகளின் கீழ்ப்புறத்தில் தோன்றும். குளோரோதலோனில் (டகோனில்) கப்ரான், மெங்கோசெப், மெனெப் போன்ற நாசினியை 2 வாரங்களுக்கொரு தடவை விசிறவும்.

தூள் பூஞ்சணநோய்

வெப்பநிலை அதிகரிக்கும் போது ஏற்படும் நோயாகும். நோயுற்ற இலைகள் மஞ்சள் நிறமடையும். இலைகளின் இரு பக்கங்களிலும் வெண்ணிற வித்தித் திணிவுகளைக் காணலாம். குளோரோதலோனில் (டகோனில்) போன்ற பங்கசு நாசினிகளை, நோய் அதிகமாக உள்ளபோது ஒவ்வொரு கிழமையும் விசிறவும்.

மென் அழுகல்

தண்டின் அடிப்பகுதியிலும், பழங்கள் நிலத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் பகுதிகளிலும், நீர்த் தன்மையான மெல்லழுகல் ஏற்படும்.

அந்திரக்நோசு நோய்

நிலத்திற்கு மேலுள்ள எப்பகுதியிலும் ஏற்படும் நோயாகும். இலையின் அடிப் பாகத்தில் முதலில் மஞ்சள் நிறமான புள்ளி அல்லது ஈரமான கறை ஏற்பட்டு, பின்னர் படிப்படியாக பெரிதாகும். பெரிய புள்ளிகளின் மத்தியில் துளை காணப்படும். காய்களில் தாழ்ந்த ஈரமான கறைகள் தோன்றும். குளோரோதலோனில் (டெனோனில்) போன்ற பங்கசுநாசினியை சிபாரிசு செய்யப்பட்டவாறு விசிறவும்.

அறுவடை செய்தல்

காய்கள் மஞ்சள் நிறமானவுடன் அறுவடை செய்யவும். கூரிய ஆயுதமொன்றால் காய்களை வெட்டி அகற்றி,கொடிகளுக்கு ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க வேண்டும். சகல பக்கக் கிளைகளையும் வளர விடும் போது சிறிய காய்களே தோன்றும். அடிக்கடி அறுவடை செய்தால் விளைவைக் கூட்டலாம். ஏனெனில் பெரிய பழங்கள், புதிய பழங்கள் உண்டாவதைத் தடுக்கின்றன.

விளைச்சல்

ஹெக்டயரொன்றிற்கு 20,000 - 25,00 கிலோ கிராம் (20 - 25 மெ.தொ.)

அறுவடைக்குப் பின்

ஒரு வார காலத்திற்கு பழங்கள் பழுதடையாமல் இருக்கும். அதன் பின்பு நீர் இழக்கப்படுவதனால், அவை சுருங்கி, தரம் குறைந்து விரும்பத்தகாத சுவையையும் கொண்டிருக்கும்.