கரட்

கரட்

டவுகஸ் கெரோட்டா

Daucus carota

குடும்பம் - அம்பெலிபெரி

அவசியமான காலநிலை

கடல் மட்டத்திலிருந்து 1300 மீற்றர் வரை உயரமான 15 - 18 செ.கி வெப்பநிலை நிலவும் பிரதேசங்களில் கரட்டை மிகத் திருப்திகரமாகச் செய்கைபண்ணலாம். எனினும், 1300 மீற்றருக்குக் குறைவான பள்ளமான அல்லது மத்திய பிரதேசங்களில் திருப்திகரமாகச் செய்கைபண்ணக் கூடிய சில கரட் வர்க்கங்கள் உள்ளன.

மண்

கரட் செய்கைக்கு அதிகளவான சேதனப் பொருட்களைக் கொண்ட மணல், இருவாட்டி மண் மிக உகந்தது. எப்போதும் மண்ணில் கற்கள், சிறுகற்கள் என்பன இல்லாதிருப்பது நல்லது. இலங்கையில் காணப்படும் சிவப்பு மஞ்சள் பொட்சோலிக் மண்ணில் கரற்றை நன்கு செய்கை பண்ணலாம்.

நிலத்தைப் பண்படுத்தல்

கரட் செய்கைக்கு நிலத்தை நன்கு பண்படுத்த வேண்டும். 20 -30 ச.மீ ஆழத்திற்கு உழுதோ அல்லது கொத்திய பின்னர், நன்கு தூர்வையான மண்ணாகத் தயாரிக்கவும். 1 மீற்றர் அகலமான பாத்திகளை அமைத்துக் கொள்வதன் மூலம் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள முடியும்.

சிபாரிசுசெய்யப்பட்ட வர்க்கங்கள்

ரொப் வெயிட் (4 மாதங்கள்)

கூம்பு வடிவான கிழங்குகள், செம்மஞ்சள் நிறமானவை. அதிக இலைகள், மத்திய ஈரவலயம், மலைநாட்டு ஈரவலயம், மலை நாட்டு இடை வலயத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டது.

கேப் மார்கட் (3 - 3 1/2 மாதங்கள்)

மலை நாட்டு ஈரவலயம், மலைநாட்டு இடைவலயத்திறகு பிரபல்யமானது. உருளை வடிவான கிழங்கு,செம்மஞ்சள் நிறமானவை. மத்தியில் மஞ்சள் நிறமானது. உருளை வடிவான இளம் மஞ்சள் நிறமான கிழங்குகள்.

நியு குரோடா (3 - 3 1/2 மாதங்கள்)

உருளை வடிவான கடும் செம்மஞ்சள் நிறமான கிழங்குகள், தற்போது விவசாயிகளிடையே நன்கு பிரபல்யமான வர்க்கம் நியு குரோடா ஆகும். இதனை மலைநாட்டைப் போன்றே பள்ள நாட்டிலும் செய்கைபண்ண முடியும்.

Nantis half long - (3 - 3/2 மாதங்கள்) குட்டையான கிழங்கு மலைநாட்டு விவசாயிகளிடம் பிரபல்யமானது.

தேவையான விதை

ஹெக்டயரொன்றிற்க்கு 04 கி.கி

நடுகைக் காலம்

கரட் விதைகள் ஒரே தடவை பாத்திகளில் வீசி விதைக்கப்படும். இதனை சிறுபோகம், காலபோகம் இரண்டிலும் செய்கை பண்ணலாம், ஆனால், நீரூற்றல், ஏனைய வசதிகளுக்கேற்ப கால போகத்திலேயே அதிகளவு செய்கை பண்ணப்படுகின்றது.

இடைவெளி

இரண்டு முறைகளில் கரட் விதைகளைத் தோட்டத்தில் நடலாம்.

  • பாத்திகளில் வீசி விதைத்தல்
  • வரிசைகளில் விதைத்தல் (25 ச.மீ x 5 ச.மீ)

விதைகள் முளைத்து 3 - 4 கிழமைகளில் அவற்றை ஐதாக்குவதோடு, 8 வது கிழமையில் சிபாரிசு செய்யப்பட்ட இடைவெளியில் மீண்டுமொரு முறை ஐதாக்க வேண்டும். வரிசைகளில் நடுவதால் நாற்றுக்களை ஐதாக்கல், பராமரித்தல் என்பன இலகுவாக இருக்கும்.

பசளை இடல்

ஹெக்டயருக்கு இடவேண்டிய பசளைகளில் அளவு கீழே தரப்பட்டுள்ளது.

யூறியா

கி.கி / ஹெ

முச்சுப்பர் பொசுபேற்று

கி.கி / ஹெ

மியுறியேற்றுப்

பொட்டாசு கி.கி / ஹெ

அடிக்கட்டுப் பசளை

-

275

-

விதை முளைத்து 3 வது வாரம்

110

-

85

விதை முளைத்து 6 வது வாரம்

110

-

85

விதை முளைத்து 9 வது வாரம்

110

-

85

இதைத் தவிர பாத்திகளைத் தயார் செய்யும்போது ஹெக்டயருக்கு 5 - 10 தொன் சேதனப் பசளைகளை (சாணம் அல்லது கூட்டெரு) இடவும்.

நீர்ப் பாசனம்

கரட் செடிகளின் வேர்த் தொகுதிக்கு அண்மையில் ஈரத்தன்மையைப் பராமரிக்கக் கூடியவாறு அவசியமான நீரை ஊற்ற வேண்டும். குறிப்பிட்ட அளவை விட நீரின் அளவு குறையும் போது விளைச்சல் குறையும்.

களைக் கட்டுப்பாடு

கையால் பிடுங்கி அல்லது களைநாசினிகளை விசிறுவதன் மூலம் களையைக் கட்டுப்படுத்தலாம். மேற்கட்டுப் பசளைகளை இடமுன் களையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

மெற்றிமியுசின் (சென்கர்) என்ற களைநாசினியை ஹெக்டயருக்கு 0.35 கி .கி என்ற அளவில் விதைகளை நடமுன் மாத்திரம் விசிற வேண்டும். கலப்புப் பயிராகச் செய்கைபண்ணும் போது களைநாசினிகளை விசிற வேண்டாம்.

நோய் பீடைக் கட்டுப்பாடு

கரட் இலை வெளிறல், பக்றீரியா மென் அழுகல் என்பன பொதுவாக ஏற்படும் நோய்களாகும். செப்பு கலந்த பங்கசு நாசினிகளை விசிறுவதன் மூலம் இலை வெளிறல் நோயைத் தவிர்த்துக் கொள்ள முடியும். அளவிற்கதிகமாக நீர் ஊற்றுவதைத் தவிர்ப்பதனால் பக்றீரியா மென் அழுகல் நோய் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும். பல்வேறு புழுக்கள், சிற்றுண்ணிகள், அழுக்கணவன்கள் கறையான் போன்ற பூச்சிகளின் தாக்கத்தை சிபாரிசு செய்யப்பட்ட பூச்சிநாசினிகளை விசிறுவதன் மூலம் கட்டுபடுத்த முடியும்.

இலைப் புள்ளி

வட்ட வடிவான வெண்ணிற மத்தியைக் கொண்ட புள்ளிகளை இளம் இலைகளில் காணலாம். விதைகளை சிபாரிசு செய்யப்பட்ட பங்கசு நாசினியால் பரிகாரம் செய்தல் பயிர் சுழற்சி, பாதிக்கப்பட்ட பயிர் மீதிகளை அழித்தல்.

Alternaria அழுகல்

முதிர் இலையில் புள்ளிகள் பின்னர் கபில நிற அடையாளமாக மாறும். விதைகளை சிபாரிசு செய்யப்பட்ட பங்கசு நாசினியால் பரிகாரம் செய்தல், பயிர் சுழற்சி, பாதிக்கப்பட்ட பயிர் மீதிகளை அழித்தல்

பக்றீரியா மென் அழுகல்

பாதிக்கப்பட்ட பகுதி மென்மையாகும். அழுகிய தூர்வாசணை ஏற்படும். பயிர் சுழற்சி பாதிக்கப்பட்ட பயிர் மீதிகளை அழித்தல், நல்ல நீர் வடிப்பு அறுவடையில் சேதத்தை தவிர்த்தல், காற்றோட்டமான உலர் இடத்தில் சேமித்தல், பங்கசு நாசினியை விசிறல் இதனைக் கட்டுப்படுத்த உதவும்.

பீடைகள்

கபில வெட்டுப்புழு, நத்தை, வட்டப்புழு

அறுவடை

கிழங்குகளின் மேற்புறம் 2.5 - 5.3 ச.மீ வரை பெரிதானவுடன் அறுவடை செய்யலாம். கரட் கிழங்குகள் சேதமடையாதவாறு அறுவடை செய்யவும்.

விளைச்சல்

நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டம் ஒன்றில் இருந்து 30 -35 மெ.தொ/ஹெ ஐ விட அதிக விளைச்சலைப் பெறலாம்.

அறுவடைக்குப் பின்

கரட் கிழங்குகளை அறுவடை செய்த பின் அதனை நன்கு சுத்தம் செய்யவும். சுத்தமான நீரிற் கழுவி சந்தைக்கு அனுப்ப வேண்டும். பக்றிரியா இனங்கள் கிழங்குகளில் காணப்படுவதால் அழுகலாம். எனவே, விசேட கவனமெடுப்பது அவசியமாகும்.