மரவள்ளி

மரவள்ளி இயூபோபியேசியே தாவரக் (Euphorbiacea ) குடும்பத்தைச் சேர்ந்த பயிராகும். இது மனிக்கொட் எஸ்குலாந்தா (Manihot esculanta) எனும் தாவரவியற் பெயரினால் அழைக்கப்படுகின்றது. நிலமட்டத்திலிருந்து 1200 மீற்றர் வரையான உயரமான இடங்களிலும் 25 - 29 பாகை சதம வெப்பநிலையிலும் சிறப்பாக வளரக் கூடியது.

மரவள்ளியின் தாயகம் தென் அமெரிக்காவின் பிறேசில் நாட்டில் வடகிழக்குப் பகுதியாகும். காலப்போக்கில் உலகின் எல்லாப் பாகங்களுக்கும் பரவி தற்போது ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, உகண்டா, கானா, கொலம்பியா பிறேசில், நைஜீரியா, இந்தியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ், கென்யா, றுவண்டா ஆகிய நாடுகளிலும் இச்செய்கை பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் பயன்பாடு மிக உச்ச அளவில் உலகளாவிய ரீதியில் காணப்படுகின்றது. கைத்தொழிற்துறை ரீதியான உற்பத்திகள், உணவுத் தேவை, விலங்குணவு சிற்றுண்டித் தயாரிப்புக்கள் என்பவற்றிலும் உலகளாவிய ரீதியில் பிரதான இடத்தினை வகிக்கிறது. எக்காலத்திலும் பயிரிடக் கூடியதாக உள்ளமையினாலும் நல்ல விளைச்சல் கிடைப்பதனாலும், கேள்வி நுகர்வு காணப்படுவதாலும் இப்பயிரின் உற்பத்தியை எக்காலத்திலும் பெறக்கூடியதாக உள்ளது.

இலங்கையில் ஈரவலயத்தில் கம்பஹா,கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் செய்கை பண்ணப்பட்டு வருகிறது.

தாவரத்தின் உருவவியலும் உடற்றொழியலும்

தண்டுமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. தண்டு முளைக்கும் தன்மையானது இதன் சேமிப்புணவில் தங்கியுள்ளது. முளைகள் தண்டிலிருந்து வளரும்போது அதற்குத் தேவையான உணவு 3 - 4 கிழமைகளுக்கு மட்டும் தண்டிலிருந்து வழங்கப்படுகிறது. பின்பு இலையினூடாக அதன் ஒளித்தொகுப்புச் செயற்பாட்டின் மூலம் கிடைக்கின்றது. தண்டு நடப்பட்டு 3 - 4 நாட்களில் வேர் உண்டாகின்றது.

இங்கு இருவிதமான வேர்கள் உண்டாகின்றன. பக்க வேர், ஆணிவேர் ஆகும். ஆணிவேரிலே உணவு சேமிப்பதன் மூலம் கிழங்காக மாறுகிறது. தண்டுகளில் அரும்புகள் நிலத்திற்கு மேலான கணுக்களிலிருந்து உருவாகும். தாவரம் நடப்பட்டு 25ம் நாள் தொடக்கம் வேரில் உணவு சேமிப்பு நடைபெறத் தொடங்கும். இது 60ம் நாள் மட்டும் விரைவாக நடைபெற்று பின்னர் குறைவடையத் தொடங்கும். உயர்ந்த நீண்ட தண்டு, நீண்ட இலைக்காம்பு என்பன காணப்படும். தண்டின் நிறம் பச்சை தொடக்கம் சிவப்பு கலந்த அல்லது கடும் சிவப்பு வரை மாறுபட்டுக் காணப்படும். இலைகள் யாவும் 5 - 7 வரையான பிரிவுகளைக் கொண்டு காணப்படுவதுடன் இவை வர்க்கத்திற்கேற்ப வேறுபட்டுக் காணப்படும்.

போசணை முக்கியத்துவம்

கிழங்கு பிரதான சக்தியை வழங்கும் உணவாகும். இதைவிட இதன் இலைகளிலே கூடுதலான விற்றமிகளும் கனிப்பொருட்களும் காணப்படுகின்றன.

மரவள்ளிக் கிழங்கிலும் மற்றும் இலையிலும் உள்ள போசணைச் சத்துகள்

போசனைக் கூறு

கிழங்கு(%)

இலை (%)

நீர்

62.8

74.8

சக்தி கிலோ கலோரி (K.cal)

580

-

புரதம்

0.53

5.1

மாப்பொருள்

31.0

-

வெல்லம்

0.83

-

நார்

1.40

27

சாம்பல்

0.84

-

கனியுப்புகள் - 100 கி. உள்ள மில்லி கிராம்கள் (mg/100g)

கல்சியம் ca

20

350

பொசுபரசு P

40

56

மக்னிசியம் Mg

36

-

பொட்டாசியம் K

302

கந்தகம் S

6.4

இரும்பு Fe

0.23

218

உயிர்ச்சத்துக்கள் (mg/100g)

குறைந்தளவு

3

விற்றமின் A

0.05

0.2

தயமின்

0.04

0.3

றைபோபிளேவின்

0.60

1.5

நிக்கொட்டினிக் அமிலம்

15.0

200

விற்றமின் C

ஏனைய பயிர்களுடன் ஒப்பிடும்போது மரவள்ளி பின்வரும் நன்மைகளைக் கொண்டுள்ளது.

 • நோய்களால் ஏற்படும் சேதம் மிகக் குறைவு
 • பயிர்ப்பாலனம் இலகுவானது
 • வளம் குறைந்த மண்ணிலும் ஓப்பீட்டளவில் விளைவு தரும்.
 • 4-6 மாத காலம் வரட்சி காணப்பட்டாலும் அதிகம் பாதிக்கப்படமாட்டாது
 • பல்வேறு காலநிலைகளுக்கும் பயிர்ச்செய்கை முறைகளுக்கும் ஏற்றது
 • விசேடமான நுட்பங்கள் எதுவுமின்றி குறைந்த உள்ளீட்டுடன் உற்பத்தி செய்யலாம்.

காலநிலைத் தேவைகள்

கடல் மட்டத்திலிருந்து 1200 மீற்றர் உயரம் வரையான பிரதேசத்தில் இதனைப் பயிரிடலாம். இது அயனமண்டல தாழ்நாட்டிற்கு ஏற்றது. சூடான ஈரக் காலநிலையும் 25-29 பாகை சென்ரிகிறேட் வெப்பநிலையும் இப்பயிரின் வளர்ச்சிக்கு ஏற்றது. குளிர் காலநிலையில் இப்பயிர் சிறப்பாக வளராது. 1000-1500 மி.மீ மழை வீழச்சி வருடம் முழுவதும் பரந்து காணப்படுதல் அவசியம். எனினும் இப்பயிர் வரட்சியையும் தாங்கக்கூடியது. வருடமழை 500 மி.மீ இலும் குறைவான இடத்தில் மரவள்ளியைப் பயிரிடலாம். நீர் குறைவாக உள்ளபோது தாவரம் இலைகளை உதிர்ந்து ஆவியுயிர்பைக் குறைப்பதும் மழை வரும் போது திரும்பவும் இலைகளை உற்பத்தியாக்கி வளர்வதும் இப்பயிரின் சிறப்பம்சமாகும். இது ஒரு குறுகிய நாட் தாவரம். எனவே நாளின் நீளம் (day length) அதிகரித்தால் கிழங்கு உருவாதல் பிந்தும். மரவள்ளிப் பயிர்ச்செய்கைக்கு இருவாட்டி மண் சிறந்தது. எனினும் ஏனைய மண்களிலும் இதனைப் பயிரிடலாம்.

சிபாரிசுசெய்யப்பட்ட வர்க்கங்கள்

பின்வரும் வர்க்கங்கள் பயிர்ச்செய்கைக்குச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. இவை கூடிய காபோவைதரேற்று, கூடிய உலர் பொருள், குறைந்தளவு பிறசிக்கமிலம் கொண்டன.

சுரனிமல (BW 1)

இது களுத்துறை மாவட்டத்தில் இயற்கையான தெரிவுக்குட்பட்ட ஒரு வர்க்கமாகும். வெள்ளி சாம்பல் நிறமான தண்டின் நுனியில் கிளைவிடும். இளம் இலைகள் சிவப்புக் கபில நிறமானதோடு பச்சை நிறமான முதிர்ச்சியடைந்த இலைகள் கடும் செம்மஞ்சள் - சிவப்பு காம்பினைக் கொண்டது. கிழங்குகள் கபில நிறமான வெளித் தோலையும் வெண்ணிறமான கிழங்குகளையும் கொண்ட நீண்டனவாகும். சராசரி விளைச்சல் ஹெக்டயரொன்றிற்கு 35-50 தொன்களாகும். ஜதரசன் சயனைட்டின் (HCN) அளவு 38.34 ppm ஆகும்.

ஸ்வர்ணா (BW 2)

வெள்ளி சாம்பல் நிறமான தண்டின் நுனியில் கிளை விடாது. இளம் இலைகள் சிவப்பு கபில நிறமானதோடு பச்சை நிறமான முதிர்ச்சியடைந்த இலைகள் காணப்படும். கடும் சிவப்பு நிறக் காம்பினைக் கொண்டவை. மத்திய அளவான கிழங்குகளின் வெளித்தோல் கபில நிறமானவை. கிழங்குகள் மஞ்சள் நிறமானவை. சராசரி விளைச்சல் ஹெக்ரெயர் ஒன்றிற்கு 35 - 40 தொன்களாகும். ஐதரசன் சயனைட்டின் (HCN) அளவு 20.52 ppm ஆகும்.

ஷானி (BW14)

இது கொழும்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகளினால் தெரிவு செய்யப்பட்டதொரு வர்க்கமாகும். கடும் கபில நிறமான தண்டு காலம் செல்ல கிளைவிடும். இலைகளும் காம்பும் பச்சை நிறமானவை. பெரியளவான கிழங்குகளின் வெளித்தோல் கபில நிறமானவை. கிழங்குகள் வெண்ணிறமானவை சராசரி விளைச்சல் ஹெக்டயரொன்றிற்கு 35-40 தொன்களாகும். ஐதரசன் சயனைட்டின் (HCN) அளவு 43 ppm ஆகும்.

கிரிகாவடி

குறுகிய காலத்தில் அதிக விளைச்சலைத் தரக் கூடியது. அதிக உலர் பொருளையும் காபோவைதரேற்றையும் கொண்டுள்ளது. குறைவான நச்சுப் பதார்த்தத்தையும், வேறு பல விசேட இயல்புகளையும் கொண்ட இனமாகும்.

ஆறு மாதத்தில் அறுவடை செய்யும் போது 20 தொன் விளைவையும், 11 மாதத்தில் அறுவடை செய்யும் போது 60 தொன் விளைச்சலையும் ஒரு ஹெக்ரயரில் தரக்கூடியது. பருவகாலங்களில் ஈரவலயத்திலும், நீர்ப்பாசனத்தின் கீழ் உலர் வலயத்திலும் செய்கை பண்ண முடியும். இவ்வர்க்கம் கன்னொறுவ மத்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் தாவரவியல் பிரிவினரால் விருத்தி செய்யப்பட்டது. விரைவில் கிளைவிடக் கூடியது. 1.5 மீற்றர் உயரம் வரை வளரும். ஒரு தாவரத்தில் இருந்து 8-11 கிழங்குகள் வரை உற்பத்தியாகும். கிழங்கின் உலர் பொருளின் அளவு 42%, சக்தி 72%, ஐதரசன் சயனைட்டு ஒரு மில்லியனில் 18 பங்குகள் ஆகும். கிழங்கின் வெளித்தோலும் உட் தோலும் வெள்ளை நிறமாகக் காணப்படும்.

MU 51 (பேராதனைத் தெரிவு)

இது உள்ளூர் பேதம் குறைவான கிளைவிடும் தன்மை கலப்புப் பயிர்ச்செய்கைக்கு ஏற்றது. வெள்ளைச் சதையும் ஊதா நிற உட்தோலும் கபில நிற வெளித்தோலும் கொண்டதால் தண்டிலிருந்து அகற்றுதல் இலகுவாகும். இவ் வர்க்கம் ஏற்றுமதிக்கு ஏற்றது. இதில் பிறசிக்கமில அளவு 45-50 மி.கிராம் / கி.கி ஆகும். பயிரின் முதிர்ச்சிக் காலம் 8-10 மாதங்களாகும். விளைவு 35-40 தொ / ஹெக்.

சி .ஏ. ஆர். ஐ. - 555

உள்ளூரில் விருத்தி செய்யப்பட்டது. குறைந்த கிளைவிடும் தன்மை கொண்டது. கலப்புப் பயிர்ச் செய்கைக்கு ஏற்றது. சதை பால் போன்ற வெள்ளை நிறமானது. உட்தோல் மென் ஊதா நிறமானது. வெளித்தோல் கபில நிறமானது. சமைக்கும் தரம் சிறந்தது. இதில் பிறசிக்கமிலம். 28 - 30 மி. கிராம் / கி.கி கிழங்கு பயிரின் வயது 8 -10 மாதம், விளைவு 35-40 தொ / ஹெக்.

நிலப் பண்படுத்தல்

பாரம்பரிய முறையில் நிலத்தைப் பண்படுத்தாது மண்ணைக் குவித்து துண்டங்கள் கிடையாகவோ அல்லது சாய்வாகவோ நடலாம். பொதுவாக மண்குவியல் 30-60 ச.மீ உயரத்திற்கு குவிக்கப்படும். விருத்தி செய்யப்பட்ட முறையில் மரவள்ளிச் செய்கைக்கு மண் 25-50 ச.மீ ஆழம் வரை உழுது பண்படுத்தப்படும். ஒரு முறை உழுது பின் பரம்படிக்கப்படும். இதன்பின் தண்டுத் துண்டங்கள் மேடையில், வரம்புகளில் அல்லது சால்களில் நடப்படும்,

நடுகை இடைவெளி

தனிப்பயிராக அல்லது ஒரு வரிசை மட்டும் இடைப்பயிர்ச் செய்கை பண்ணுவதாயின் கூடிய கிளை விடும் தன்மையுள்ள நடுகைத் துண்டங்களை 120 x 120 ச.மீ இடைவெளியிலும், கிளைவிடும் தன்மை குறைந்த துண்டங்களாயின் 90 x 90 ச.மீ இடைவெளியிலும் நடலாம். ஏற்றுமதி பயிர்ச்செய்கைக்கு 75 x 75 ச.மீ இடைவெளியிலும் நடலாம். தென்னை மரங்களிற்கிடையே ஊடு பயிராகச் செய்கை பண்ணுவதாயின் மரங்களிலிருந்து 2 மீற்றர் தூரத்தில் நடல்வேண்டும்.

நடுகைத் துண்டங்கள்

 • முதிர்ந்த தண்டுகளிலிருந்து தண்டுத் துண்டங்கள் 20-25 ச.மீ நீளமானவை தெரியப்படும்.
 • குளிரான உலர்ந்த இடங்களில் துண்டங்களை ஒரு கட்டாகக் கட்டி வைப்பதால் நடுகை வரை பொருட்களை 2-3 வாரங்கள் வரை சேமித்து வைக்கலாம்.
 • தண்டின் நுனிப்பகுதி நடுவதற்கு உகந்ததல்ல முதிர்ந்த துண்டங்களே அதிகளவில் வேர் விடும் தன்மை கொண்டனவாகும்.
 • நடுவதற்குத் தெரிவு செய்யப்படும் தண்டுத் துண்டங்கள் 4-6 அரும்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
 • துண்டங்களைப் பெற்றுக் கொண்ட நாளிலோ அல்லது அடுத்த நாளோ நடுவது உகந்தது.

நடுகை

 • ஹெக்டயர் ஒன்றிற்கு 12,300 துண்டங்கள் தேவைப்படும் (90 x 90 ச.மீ இடைவெளி,)
 • பொதுவாக மழையுடன் நடுவது சிறந்தது.
 • உலர் வலயத்தில் பெருமழையுடன் அல்லது நீர்ப்பாசனத்துடன் நடலாம்.
 • ஈரவலயத்தில் வருடம் முழுவதும் நடலாம்.
 • நடும் போது தண்டின் 2-3 அரும்புகள் நிலத்திற்கு மேலே விட்டு துண்டங்களை செங்குத்தாக மண்ணில் புதைக்கலாம்.
 • நடும்போது அரும்புகள் மேல் நோக்கி இருத்தல் அவசியம்.

எனினும் சில இடங்களில் தண்டு கிடையாகவோ அல்லது ஒரு சரிவாக ஒரு கோணத்திலோ நடப்படுகிறது.

இது ஈரவலயமான கம்பஹா, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை மாவட்டங்களில் வீட்டுத் தோட்டங்களிலும் (Back yard crop) பெரியளவிலான தோட்டங்களாகவும் செய்கை பண்ணப்படுகின்றது. இடை வலயமான குருநாகல் மாவட்டத்தில் தென்னை, அன்னாசிப் பயிர்களுடன் கலப்புச் செய்கையாக செய்கை பண்ணப்படுகின்றது. உலர் வலயமான புத்தளம், அநுராதபுரம், அம்பாறை, அம்பாந்தோட்டை, மொனாராகலை மாவட்டங்களில் பெரிய அளவில் சேனைப்பயிர்ச் செய்கை பண்ணப்பட்டு கூடுதலான விளைவு பெறப்படுகின்றது.

மரவள்ளிப் பயிருக்கான பசளைச் சிபாரிசு

சேதனப் பசளைகள்

சேதனப் பசளையாக கோழியெரு அல்லது மாட்டேருவை ஒரு ஹெக்டயரிற்கு 10 தொன் என்ற அளவில் பயன்படுத்தப்படுகின்றது இதனை நடுவதற்கு 3-5 நாட்களுக்கு முன்னர் பிரயோகிக்க வேண்டும்.

அசேதனப் பசளைகள்

மரவள்ளிக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள இரசாயனப் பசளைகளின் அளவுகள் மறுபக்கம் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

வளமாக்கி

நட்டு 15 நாட்களின் பின் கி,கி/ ஹெக்.

நட்டு 2 1/2 - 3 மாதங்களின் பின் கி.கி / ஹெக்

நட்டு 4 – 4 1/2 மாதங்களின் பின் கி.கி. / ஹெக்

யூறியா

85

85

85

செறிந்த சுப்பர் பொசுபெற்ற

120

-

-

மியூற்யேற்றுப் பொட்டாசு

125

60

60

 • வளமாக்கி தாவரங்களைச் சுற்றி இடவேண்டும்.
 • ஒவ்வொரு பசளைப் பிரயோகத்தின் பின்பும் மண் அணைக்க வேண்டும்.
 • அதிகளவு நைதரசன் இடின் கிழங்கில் சயனோஜீனிக் குளுக்கோசைட்டின் அளவு கூடுவதால் நைதரசன் பசளை குறைந்தளவிலேயே இடுதல் வேண்டும்.
 • மரவள்ளி நட்டு 5-6 மாதங்களின் பின் அடியிலைகள் உதிராது காணப்படின், அவற்றை அகற்றித் தாவரத்தைச் சுற்றிப் பத்திரக்கலவையிடின் அதுவும் பயிரிற்கு வளமாக அமையும்.
 • நட்டு 05 மாதங்களிற்குள் மேற்கட்டுப்பசளையிடுவது மிகவும் முக்கியம். மண் ஈரமாகவுள்ள போது மட்டும் மேற்கட்டுப் பசளைகளை இடவும்.
 • தண்டைச் சுற்றி 10-15 ச.மீ தூரத்தில் பசளையையிட்டு மண் அணைத்து விடுக.

களைக்கட்டுப்பாடு

தாவரம் தரையை மூடி வளரும் வரை களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். கையினால் களைக்கட்டுப்படுத்தல் இலாபகரமானது. பயிர் நட்டு முதல் 3 1/2 - 4 மாதங்கள் பயிரிடையே களைகள் இல்லாதிருக்க வேண்டும்.பொதுவாக 1-3 தடவை களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

01 வது களைகட்டல் - நட்டு 3-4 வாரங்களில்

02 வது களைகட்டல்- நட்டு 2 மாதங்களில் பின்

03 வது களைகட்டல் - நட்டு 3 மாதங்களில் பின்

இறுதிக் களைகட்டலுடன் மண் அணைத்தலும் செய்யப்படும்.

இடைப்பயிர்ச் செய்கை

குறைவாக கிளைவிடும் தன்மையுடைய மரவள்ளி வர்க்கங்களுடன் இடைப்பயிர்ச் செய்கையை செய்யலாம். ஆரம்ப காலத்தில் மரவள்ளியின் வளர்ச்சி குறைவு. எனவே இக்காலத்தில் மரவள்ளி தனிப்பயிரெனின் சூரிய ஒளி, ஏனைய வளங்கள் என்பன வீணாகும். இதனைத் தவிர்க்க, மண்ணை விரைவாக மூடி வளரும் குறுகிய கால அவரை இனப்பயிர்களான பாசிப்பயறு, உழுந்து, கௌபீ போன்றவையும், வெண்டி போன்ற மரக்கறிப் பயிர்களையும் பயிரிடலாம். இதனால் இப் பயிர்கள் மண்ணை மூடி வளர்வதால் களைப் பிரச்சினைகள் குறைவு. ஒரு குறிப்பிட்ட அலகு நிலப்பரப்பிலிருந்து கூடிய மொத்த உற்பத்தி, சக்தி புரதம் இரண்டும் ஒரே நேரத்தில் உற்பத்தி செய்யப்படுதல் போன்றவற்றால் இப்பயிர்ச் செய்கை மூலம் சிறந்த போசணைப் பெறுமானம் பெறப்படுகின்றது.

பயிரிடைவெளி 60 ச.மீ ஆகக் குறைப்பதனால் பயிர் அடர்த்தியை அதிகரிக்கலாம், அதேபோல் பயிர் அடர்த்தி மாறாது, பயிர் இடைவெளியை 180 x 60 ச.மீ இடைவெளியில் பயிரிடின் இடையே இடைப்பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடியும் இங்கு பயிர் நட்டு முதல் 3 1/2 - 4 மாதங்களிலும் பின் 6 1/2 - 10 மாதங்களின் பின்பும் இடைப்பயிர்ச் செய்கை மேற்கொள்ளலாம்.

இங்கு எப்பயிர் நடினும் தனித்தனியே ஒவ்வொரு பயிருக்கும் சிபாரிசு செயப்பட்டுள்ள அளவு உரக்கலவை பாவித்தல் அவசியம்.

தென்னைத் தோட்டங்களில் தென்னையின் கிழ் இடைப்பயிராக மரவள்ளியைப் பயிரிடலாம். இங்கு தென்னையிலிருந்து 2 மீற்றர் தூரத்துக்கப்பாலேயே மரவள்ளி நடுதல் வேண்டும்.

அறுவடை

பயிரின் முதிர்ச்சிக்காலம் 8-10 மாதங்களாகும். எனினும் சில சமயம் விரும்பிய நேரம் அறுவடை செய்யலாம். தாவரத்தை கவனமாகக் கிழங்கு முறியாது பிடுங்குதல் அவசியம். மண் கடினமாக இருப்பின் கிழங்குகள் சேதமடைவதைத் தவிர்ப்பதற்கு பிடுங்கமுன் தாவரங்களைச் சுற்றியுள்ள மண் ஒரளவு அகற்றப்படும். இங்கு பயிர் ஒரே நேரத்தில் அறுவடை செய்ய வேண்டிய அவசியமில்லை. பொதுவாக அறுவடை செய்த கிழங்குகளை மண்ணுள் புதைத்து 1 1/2 கிழமைகள் வரை சேமிக்கலாம்.

விளைவு

சராசரியாக 10 தொ / ஹெக் விளைவு பெறப்படும். கிழங்கின் சராசரி நிறை, ஒரு தாவரத்திலுள்ள கிழங்குகளின் எண்ணிக்கை, ஒரு ஹெக்டயரிலுள்ள தாவரங்களின் எண்ணிக்கை என்பவற்றைப் பொறுத்து விளைவு வேறுபடலாம்.

மரவள்ளியின் பொருளாதார முக்கியத்துவம்

 • நோய் பீடைகளுக்கு எதிர்ப்புள்ள தன்மை.
 • உயர் விளைவு.
 • உயர்தரமான கிழங்கு, கூடிய மாப்பொருள், குறைவான நார்.
 • பயிரிட்டு 5-6 மாதங்களின் பின் எக்காலத்திலும் தேவையான போது அறுவடை செய்யலாம் அறுவடை பிந்தினும் கிழங்கு சேதமடையாது.
 • கூடிய புரதம் கொண்டது.
 • அதிக வேறுபாடுள்ள காலநிலைகளிலும் பயிரிட முடியும்.

மரவள்ளி உணவுப் பொருட் தயாரிப்புக்கள்

மரவள்ளியில் பிரஸிக்கமிலம் காணப்படுவதனால் புதிய மரவள்ளிக் கிழங்கையே உணவாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் மூன்று நாட்களின் பின் இவை நஞ்சாக்கம் அடைந்து விடும். புதிய கிழங்குகளை அவித்தல், பொரித்தல், சுடுதல் ஆகிய முறைகளில் சமைக்கலாம். காய்ந்த மரவள்ளித் துண்டுகளை இடித்து மாவைத் தனியாக அல்லது வேறு மாக்களுடன் கலந்து இடியப்பம், பிட்டு, பூந்தி, பூரி, முறுக்கு, பிஸ்கட், பற்றீஸ்,லேயர்கேக், கொக்கீஸ் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இதை விட சவ்வரிசி,மீனுக்கான உணவுப்பொருள் என்பனவும் தயாரிக்கப்படுகின்றன.

உணவுப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய உற்பத்திகள்

ஒட்டுப்பலகையின் ஒட்டு உற்பத்திப் பொருள், பிரிந்தழியக் கூடிய கொள்கலன்கள், பிசின், மருந்துப் பொருட்களின் பாதுகாப்பு மூடிகள், இனிப்பூட்டிகள் (குளுக்கோசு, புரக்ரோசு. ஜாம்), எதனோல் (மதுசாரம்), மொனோசோடியம் குளுட்ராமேற் (வாசனை அதிகரிப்புப் பதார்த்தம்) ஆகியவற்றின் மூலப்பொருட்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இவை உலகளாவிய ரீதியிலேயே முக்கியத்துவம் வாய்ந்தனவாக விளங்குகின்றன.