வற்றாளை

ஓரளவு படரும் தன்மையுடையது. முற்றிய இலைகள் கடும்பச்சை நிறமானவை. ஓரங்களில் கத்தரிப் பூ நிறத்தைக் கொண்டவை. இலைக் காம்பு பச்சை நிறமானது. இலைக்குப் பக்கத்திலுள்ள இலைக்காம்பு கத்தரிப்பூ நிறமாக காணப்படும். கிழங்குகள் கத்தரிப்பூ நிற  தோலைக் கொண்டன. இவ்வர்க்கத்தை 3 1/2 - 4 மாதங்களில் அறுவடை செய்யலாம். கிழங்குகளின் வெளித்தோல்  ஊதா  நிறமாகவும், சதைப்பகுதி செம் மஞ்சள் நிறமாகவும் காணப்படும். இதன் விளைச்சல் ஹெக்டயரொன்றிற்கு 18-20 மெ.தொன் ஆகும். சமைத்த பின் ஈரலிப்பான மாத் தன்மை கொண்டிருக்கும்.

சீ.ஏ.ஆர்.ஐ- 9 (CARI)

ஓரளவு படரும் தன்மை கொண்டவை. இலைகள் ஓரளவு அல்லது முழுமையாக சோனைகளைக் கொண்டவை. இதன் கிழங்குகள்  கடுமையான மென்  சிவப்பு நிறமானவை வெவ்வேறு வடிவங்களில் காணப்படும்.

சீ.ஏ.ஆர்.ஐ - 426 (CARI)

செடி  வகையாகும். இலைகள்  ஆழமான  வெட்டுக்களைக் கொண்டவை. கொடிகளும்  இலைகளும் பச்சை நிறமானவை. குருத்துகள் கத்தரிப்பூ கலந்த பச்சை நிறமானவை. கிழங்குகள் சீரான வடிவமானதாக காணப்படும். இளம் சிவப்பு செம்மஞ்சள் நிற  கிழங்குகளாகும். இவ்வர்க்கத்தை 3 1/2 மாதங்களில் அறுவடை செய்யலாம். கிழங்குகளின் வெளித்தோல் மென் சிவப்பு கலந்த செம்மஞ்சள் நிறமாகவும், சதை செம்மஞ்சள் நிறமாகவும் காணப்படும். இதன் விளைச்சல் ஹெக்டயரொன்றிற்கு 22-24 மெ. தொன் ஆகும். சமைத்த பின் ஈரமான தன்மை உடையது.

வாரியபொல சிவப்பு

ஓரளவு படரும் வகையானது. முற்றாக அல்லது ஓரளவு  சோணைகளைக் கொண்ட  இலைகளைக் கொண்டவை.  கிழங்குகள்  சீரான  வடிவமானவை.  கத்தரிப்பூ நிற கிழங்குத் தோலை கொண்டவை. இவ்வர்க்கத்தை 3 1/2 மாதத்தில் அறுவடை செய்யலாம்.  கிழங்குகள் அதிகளவில் சீரான வடிவத்தையும், வெளித்தோல்  ஊதா நிறமாகவும். சதைப்பகுதி வெள்ளை  நிறமாகவும் காணப்படும்.  இதன்  விளைச்சல் ஹெக்டயரொன்றிற்கு 14-15மெ. தொன்  ஆகும். சமைத்த பின்பு  ஈரலிப்பான மாத் தன்மை உடையது.

வாரியபொல வெள்ளை

தற்போது  சிபாரிசு செய்யப்படும்  வாரியபொல சிவப்பிலிருந்து விகாரமடைந்து தோன்றிய வர்க்கமாகும். ஆனால் வாரியபொல சிவப்பை விட இப்புதிய வர்க்கத்தின் விளைச்சல் அதிகமானதாகும். ஒரு கொடியிலிருந்து அதிக எண்ணிக்கையான கிழங்குகளைப் பெற்றுக்கொள்ள முடியும். கூடிய இனிப்புச்  சுவையுடையது.  மத்திய அளவான நீளமுடைய கொடியின் அடிப்பகுதியில் 08-10 கிளைகள்  உருவாகும். வாரியபொல வெள்ளை ஹெக்டரொன்றில் 20- 24 மெற்றிக் தொன்  விளைவைத்  தரும். ஒரு கொடியில் 5 - 8 கிழங்குகள் உருவாகும். 3 – 3 1/2 மாதங்களில் அறுவடை செய்ய முடியும். ஓரளவு படரும் தன்மை கொண்டவை. முற்றாக அல்லது ஓரளவு சோணைகளைக் கொண்டவை. கிழங்குகள் சீரான வடிவம்
கொண்டவை. கிழங்குகளின் வெளித்தோல்,  சதைப்பகுதி  வெள்ளை நிறமாக காணப்படும். சமைத்த பின்  ஈரமான மாத் தன்மை கொண்டது.

ரணபிம

வட்டமான, முட்டை வடிவான கிழங்குகளைக்  கொண்டது. மேற்றோல் இளம் சிவப்பு நிறமானது. சதை  இளம் மஞ்சள் நிறமானது. ஓரளவு இனிப்புச் சுவையுடையது. அறுவடை செய்வதற்கு 3 1/2 - 4 மாதங்கள் செல்லும். ஒரு ஹெக்டயரில் 17 - 20 மெற்றிக் தொன்  விளைச்சலைப் பெற முடியும். ஓரளவு படரும் தன்மை கொண்டவை. இலைகள் முற்றாக அல்லது ஓரளவு சோணை கொண்டவை. கொடி மஞ்சள் கலந்த பச்சை நிறமானவை. கிழங்குகள் இளஞ்சிவப்பு நிறத் தோலைக் கொண்டது.  சதைப்பகுதி மென் மஞ்சள் நிறமாகக் காணப்படும். ஹெக்டயரொன்றில் 20 - 24 மெற்றிக்  தொன் விளைவைத் தரும். சமைத்த பின்பு ஈரலிப்பான மாத் தன்மை உடையது.

சித்ரா

விரைவாக வளர்ச்சியடையும், இவ்வர்க்கத்தின் கொடியில்  அடிப்பகுதியில் 3 - 5 கிளைகள் வரை உருவாகும். கொடிகள்  ஆரம்பத்தில்  விரைவாக வளர்ச்சி அடைவதால் களைகளுடன் போட்டியிட்டு  வளரக் கூடிய விசேட இயல்பைக் கொண்டுள்ளன. இலைக்காம்பு பச்சை, ஊதா நிறமானது. இளம் இலைகள் சிவப்பு கபில நிறமானவை. இதன் மேற்றோல் வெண்ணெய் நிறமானது. சதை வெண்ணிறமானது. அவிக்கும் போது கடினமாகக் காணப்படும். இதில் இனிப்புச்  சுவை ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்படும். 3 மாதங்களில் அறுவடை செய்யலாம். ஹெக்டயரொன்றிலிருந்து 22 - 24 தொன்  விளைச்சலைப் பெறலாம். காலி மாவட்டத்திலிருந்து இயற்கையாக தெரிவு செய்யப்பட்டது. முதிர்ந்த  இலைகள்  பச்சை  நிறமானவை. இளம் இலைகள்  சிவப்பு கலந்த கபில நிறமானவை. இவ்வர்க்கத்தை 3 1/2 மாதங்களில் அறுவடை செய்யலாம். கிழங்குகள் கூம்பு  வடிவானவை. வெளித்தோல், சதைப்பகுதி வெள்ளை நிறமாக காணப்படும். விளைச்சல் 12 - 14 மெ.தொ/ஹெ ஆகும். சமைத்த பின் ஈரமான மாத் தன்மை உடையது.

சாந்தி

ஓரளவு நீளமான கொடியின் அடிப்பாகத்தில் 5-6 கிளைகள் உருவாகும். இளம் பச்சை நிறமானது. இலையின் கீழ்ப்புறம் பிரதான நரம்பு ஆரம்பமாகும் இடத்தில் சிறிதளவு ஊதா நிறம் காணப்படும். கிழங்கின் மேற்றோல்  பழுப்பு வெண்ணிறமானது. கிழங்கு கடினமானதுடன், ஓரளவு  இனிப்புச்  சுவையுடையது. அவிக்கும் போது  கிழங்கு மஞ்சள்  வெண்ணிறமாக  மாறும். ஹெக்டயரொன்றிலிருந்து 20-22 மெற்றிக் தொன்  விளைவைப் பெறலாம்.  அறுவடை செய்ய 3 1/2  மாதங்கள் வரை செல்லும். கழுத்துறை மாவட்டத்திலிருந்து இயற்கையாக  தெரிவு செய்யபட்டது. ஓரளவு படரும் தன்மை கொண்டது. தண்டுகள் இளம்பச்சை  நிறமானவை.  இலைகள்  கூடுதலான  சோணைகளைக் கொண்டவை. இலையின் கீழ்ப்பக்கத்தில் இலையின் அடி கத்தரிப்பூ நிறமாக காணப்படும். கிழங்குகள் முட்டை வடிவானதுடன் முனைகள் கூம்பு வடிவாகவும் காணப்படும். இதன்
வெளித்தோல், சதைப்பகுதி வெள்ளை நிறமாக  காணப்படும். விளைச்சல் 12-14 மெ.தொன்/ஹெ  ஆகும். சமைத்த பின்பு ஈரமான மாத் தன்மை உடையது.

கன்னொறுவை - சுது

ஓரளவு  படர்ந்து வளரும் கூடுதலான கிளைகளைக் கொண்டவை.  முழுக் கொடியும்  பச்சை  நிறமானது. குருத்தும், முனையரும்புகளும் ஓரளவு  நிறம் கொண்டவை.  இலைகள் கூடுதலான  சோணைகளைக்  கொண்டவை. கிழங்குகள் வட்டமான, நீள் வட்ட  வடிவான  சீரான வடிவமுடையவை.
வெள்ளை நிற தோலைக் கொண்டவை.  இவ்வர்க்கத்தை 3 1/2 - 4 மாதங்களில் அறுவடை செய்யலாம். கிழங்குகள்  உருண்டை தொடக்கம் மு ட்டை வடிவானதாகும். வெளித்தோல் வெள்ளை  நிறமுடையதாகவும், தோல்  அழுத்தமானதாகவும், சதை இளமஞ்சள் நிறமாகவும் காணப்படும். அறுவடையின்  போது  குறைந்த  வெல்லத்தை உடையது. விளைச்சல் 22 - 25 மெ.தொன் / ஹெ ஆகும்.

தவள

இவ்  வர்க்கம் உள்ளுர், வெளிநாட்டு மரபணு சேகரிப்புகளில் பெறப்பட்டதொரு வர்க்கமாகும்.  இதன் பெற்றோராக ரணபிமவைக் கருதலாம். கிழங்குகளின் தோல் வெள்ளை நிறமானதோடு, அதன் சதை இளம்மஞ்சள் நிறமானது. விளைச்சல் 24 மெ.தொன்/ஹெ ஆகும்.

அமா

சப்ராட் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட தன் மகரந்தச் சேர்கை  அடைந்த வற்றாளை விதைகளின் மூலம் தெரிவு செய்யப்பட்ட வர்க்கமாகும். கிழங்குகளின் தோல்  சிவப்பு நிறமானதோடு, அதன் சதை இளஞ்சிவப்பு  நிறமானது. கண்டி, மாத்தளை பிரதேசங்களில் செய்கை பண்ணி பெறப்பட்ட விளைச்சல் 26.9 மெ.தொன்/ஹெக்டயர் ஆகும்.

பசளை இடல்

விவசாயத் திணைக்களத்தால் வற்றாளைப் பயிருக்கு சிபாரிசு செய்யப்பட்ட பசளை அளவுகள் பின்வருமாறு. இதில்  சேதனப் பசளைகள்,  அசேதனப் பசளைகள்,  சுண்ணாம்பு  அல்லது டொலமைற் என்பவற்றில் ஒரு ஹெக்டயருக்குத் தேவையான  அளவுகள் தரப்பட்டுள்ளன.

சேதனப் பசளை

நடுகை செய்வதற்கு 3-5 நாட்களுக்கு முன்பு கோழிஎரு, மாட்டெரு அல்லது கூட்டெரு  என்பனவற்றை ஒரு ஹெக்டயரிற்கு 10 தொன் வீதம் இடல் வேண்டும்.

இராசயனப் பசளைகள்

நடுகை செய்து 2 வாரங்களின் பின்பு 60 கிலோ கிராம் யூரியா, 120 கிலோ முச்சுப்பர் பொசுபேற்று (TSP), 60 கிலோ மியுறியேற்றுப் பொட்டாசு (MOP) ஆகியவற்றை அடிக்கட்டுப் பசளையாக  இடல் வேண்டும். நடுகை செய்து 6 வாரங்களின் பின்பு 65 கிலோ யூரியா, 60 கிலோ மியூறியேற்றுப் பொட்டாசியம் என்பனவற்றை மேற்கட்டுப் பசளையாக இடல் வேண்டும். இங்கு கோழி  எருவை சேதனப் பசளையாக இட்டால் பொசுபேற்று,  மியூறியேற்றுப் பொட்டாசியம்  என்பனவற்றின் அளவை  25  வீதத்தினால்  குறைத்து பயன்படுத்தப்படலாம். பசளைகளை இட்ட  பின்னர் 3-5 நாட்களில் மண் அணைத்தல் வேண்டும். கொடியைப் பிரட்டி விடும் எட்டாவது கிழமைக்கு  முன்னர் பசளைகளை இடல் வேண்டும்.

சுண்ணாம்பிடல்

பயிரிடப்படும் மண்ணின் பீ.எச் 5 ஐ விடக் குறைவாகக் காணப்படுமாயின் தண்டுத் துண்டங்களை நடுவதற்கு 02 வாரங்களிற்கு முன்னர் ஹெக்டயரொன்றிற்கு 1-2 தொன்  என்னும் அளவில் சுண்ணாம்பு அல்லது டொலமைற்றை இடல் வேண்டும்

மேலதிக வேர்கொள்ளுதல்

தண்டுத் துண்டத்தின் சகல கணுக்களில் இருந்தும் வேர்கள்  உருவாகுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. தேவைக்கதிகமான  வேர்கள்  உருவாகும் போது  அதன் விளைவாக மேலதிக  பதிய வளர்ச்சியை ஏற்படுவதனால்  குறைந்தளவான கிழங்குகளே உருவாகும். கொடிகளைப் புரட்டி விடுவதன் மூலம் இவ்வாறு  மேலதிகமான வேர்கள் உருவாகுவதைக்   குறைக்கலாம்.

களைக்கட்டுப்பாடும் மண்  அணைத்தலும்

வற்றாளை மிகவிரைவில் வளர்ந்து மண்ணை மூடுவதால் களைகளின் வளர்ச்சியைத் தானாகவேக் கட்டுப்படுத்தும். எனினும் பயிரின்  ஆரம்ப  வளர்ச்சிக் காலத்தில் களைகளின் வளர்ச்சியைக்  கட்டுப்படுத்த வேண்டும். வற்றாளைப் பயிரிற்கு 45 நாட்களினுள் இரண்டு தடவைகளாவது  களைகளைக் கட்டுப்படுத்தி, மண் அணைத்தல் வேண்டும். பொதுவாக பசளைகளை இடுவதற்கு  முன்னர் களைகளைக்  கட்டுப்படுத்த வேண்டும்.

பீடைகள்

வற்றாளை நீள் மூஞ்சி வண்டு

இதன் முதிர்ந்த பூச்சி கொடியிலும் இலைகளிலும் மேற்தோலை உண்பதால் நீள்வட்ட வடிவமான ஒட்டுப் போட்டது போன்ற தோற்றம் ஏற்படும். கிழங்கின் வெளித் தோலில் வட்டமான துவாரங்கள் காணப்படும். குடம்பி கொடியின் உட்புறத்தை உண்பதால் தண்டுகள் தடிப்படைந்தும், வெடிப்புற்றும் ஒழுங்கற்ற வடிவிலும் காணப்படும். இதன் குடம்பி கிழங்குகளில் துவாரங்களை உருவாக்குவதால் விரைவில் அவை பழுதடையும்.

இதனைக் கட்டுப்படுத்த வற்றாளைத் தண்டுத் துண்டங்களை நடுவதற்கு முன்னர் தொகுதிப் பூச்சி நாசினியொன்றில் 25-30 நிமிடங்களுக்கு
அத்தண்டுகளை ஊறவிட வேண்டும். தண்டின் அடிப்பகுதியில் வெடிப்புகள் ஏற்படாதபடி மண் அணைத்து, சீராக நீரூற்றல் வேண்டும். மூடுபடை காணப்படுவதாலும், மண் நீர் பாதுகாக்கப்படுவதனால் தண்டின் அடிப்பகுதியில் வெடிப்புகள் ஏற்படுவது குறையும்.

வேர் உண்ணும் வண்டுகள்

வேர் உண்ணும் வண்டுகள் வற்றாளைப் பயிரிற்கு சேதம் ஏற்படுத்தும். கிழங்கு தோன்ற ஆரம்பிக்கும் ஒரு மாதப் பருவத்தில் செலிக்குரோன் என்னும் நாசினியை விசிறி இவ்வண்டைக் கட்டுப்படுத்தலாம். தேவை ஏற்பட்டால் இரண்டாம் முறையும் அறுவடைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு இதனை விசிறலாம்.

நோய்கள்

வற்றாளையில் மோசமான நோய்கள் எதுவும் இல்லை. எனினும் பியுசாறியம் ( Fusarium ) இலை, கிழங்கு அழுகல் உருவாகலாம். இதனால் இலைகள் மஞ்சள் நிறமடைந்து பின்பு கொடி இறக்கும். கிழங்குகள் அழுகும். இதனைக் கட்டுப்படுத்த தோட்டத்தில் நீர் வடிந்து செல்வது  முறையாக இருத்தல் வேண்டும். பயிர்ச் சுகாதாரத்தினை பேண வேண்டும்.

அறுவடை செய்தல்

வர்க்கங்களுக்கேற்ப அறுவடைக்காலம் வித்தியாசப்படும். பொதுவாக 3-5 மாதங்களில் அறுவடை செய்யலாம்.  இலைகள் மஞ்சள் நிறமாக மாறும் போது கிழங்குகள் முதிர்ச்சி நிலைக்குத் தயாராகுகின்றன. இந்நிலையில் ஒரு சில பயிரைப் பிடுங்கி கிழங்கினை வெட்டிப் பார்ப்பதன் மூலம் முதிர்ச்சி நிலையைத் தீர்மானிக்கலாம். முதிர்ச்சியடையாத கிழங்குகளில் வெட்டப்பட்ட பகுதிகள் கரும் பச்சை நிறமானதாக காணப்படும். முதிர்ச்சியடைந்த கிழங்குகளில் வெட்டிய பகுதி நன்கு உலர்ந்து காணப்படும். இந் நிலையில் கிழங்குகளிற்கு சேதம் ஏற்படாதவாறு அவற்றை மண் வெண்டியால் பிடுங்கலாம்.

அறுவடை செய்யும் போது நிலத்தை நீரில் நனைத்து பின்னர் அறுவடை செய்ய வேண்டும். கிழங்குகளை சூரிய ஒளியில் வைத்தல் கூடாது. அறுவடை  தாமதமாயின் கிழங்குகளின் சுவை குறைவதுடன் வண்டுகளின் தாக்கமும் அதிகரிக்கும். அறுவடை செய்யப்பட்ட கிழங்குகளை 4 – 7 நாட்களுக்கு திறந்த வெளியில் இடுவதனால் கிழங்குளை 3 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.

விளைச்சலின் அளவு, சந்தை விலை, உற்பத்திச் செலவு  என்பனவற்றில் வற்றாளைப் பயிரிலிருந்து பெறப்படும் இலாபம் தங்கியுள்ளது. பொதுவாக ஒரு ஹெக்டயர் வற்றாளைக் கிழங்குப் பயிரிலிருந்து சுமார்  ஐம்பதாயிரம் ரூபாவை நிகர வருமானமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

தரப்படுத்தல்

அறுவடை  செய்யப்பட்ட கிழங்குகளில் உள்ள மண்ணை அகற்றி, நீரில் கழுவ வேண்டும். அத்துடன் நீள்மூஞ்சி வண்டினால் பாதிக்கப்பட்ட கிழங்குகள், பொறிமுறை சேதங்களிற்கு உட்பட்டவை என்பனவற்றை  அகற்றிய பின்னர் வர்க்கம் கிழங்குகளின் பருமன்  என்பனவற்றின் அடிப்படையில் தரப்படுத்த வேண்டும். இதனால் சிறந்த முறையில் இவற்றை விற்பனை செய்து கொள்ள முடியும்.

பொதி செய்தல்

கிழங்குகளை தரப்படுத்திய பின்னர் வர்க்கத்திற்கேற்பவும், பருமனுக்கேற்பவும் வெவ்வேறான துளைகளைக் கொண்ட சாக்குகளில் அல்லது பொலிசெக்  உரைகளில் பொதி செய்து கொண்டு செல்லலாம். இங்கு பொதி செய்யும் சாக்கு சுத்தமானதாக  இருக்க  வேண்டும். பொதி செய்யும் போது அளவிற்கதிகமான கிழங்குகளை சாக்குகளில் இடக் கூடாது. காற்றோட்டமுள்ள பெட்டிகளில் பொதி செய்வது  சிறந்த  முறையாகும்.

கொண்டு செல்லல்

லொறிகளில் சீரான காற்றோட்டம் கிடைக்கக் கூடியவாறு கொண்டு செல்ல வேண்டும். கொண்டு செல்லும் போது கிழங்குகளிற்கு சேதம் ஏற்படாத வகையில், கொண்டு செல்ல வேண்டும்.

களஞ்சியப்படுத்தல்

களஞ்சியப்படுத்தும் போது  கிழங்குகள் பதப்படுகின்றன. இதன் போது தடிப்படைவதுடன் சேதங்கள் குணமாகின்றன. நிலத்தில் உலர்ந்த  புற்களைப் பரவி 4-7 நாட்களுக்கு வைத்திருப்பதனால் நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கலாம். பதப்படுத்தப்பட்ட கிழங்குகளாயின் 2-3 மாதங்களுக்குக் களஞ்சியப்படுத்தி வைக்க முடியும். இதற்காக பின்வரும்  முறைகளைப் பயன்படுத்தப்பட முடியும்.

  • இறாக்கைளில் பரவி உலர்ந்த புற்களால் மூடிவிடுதல்
  • மண்ணில் புதைத்து வைத்தல்
  • மணல் மேல் பரவி, உலர்ந்து புற்களால் மூடிவிடுதல்

களஞ்சியப்படுத்தும் போது 30 சதம பாகை வெப்பநிலையிலும், 85-90% சாரீரப்பதன் உள்ள போதும் களஞ்சியப்படுத்தி வைத்தல்  உகந்தது. களஞ்சயப்படுத்தும் இடம்  குளிர்மையாக இருத்தல்  அவசியம்.