பாகல்

மொமோடிகா காரன்டியா

Mormodica charantia L.

குடும்பம் - குக்கர்பிற்றேசி

எமது நாட்டில் பாகல் மிகவும் பிரபல்யமானதொரு மரக்கறியாகும். இதில் காணப்படும் மருத்துவ குணங்களினால் இதற்கு எப்போதும் கிராக்கி நிலவும்.

பொருத்தமான காலநிலை

கடல் மட்டத்திலிருந்து 1200 மீற்றர் உயரம் வரையுள்ள பிரதேசத்தில் இதனை திருப்திகரமாகச் செய்கை பண்ணலாம்.

மண்

சேதனப் பொருட்களைக் கொண்ட, நீர் நன்கு வடிந்து செல்கின்ற மண் மிகவும் உகந்தது. மண் பீ.எச்.பெறுமானம் 5.5 - 7.5 ஆக இருக்க  வேண்டும்.

சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்கள்

எம். சி - 43

மத்திய அளவுடைய இளம் பச்சை நிறமான காய், காயின் மேற்புறத்தில் பற்கள் போன்ற விளிம்புகளைக் காணலாம்.

தின்னவேலி வெள்ளை

ஓரளவு பெரிய காய்கள், வெண்பச்சை நிறமானவை, காயின் மேற்பரப்பில் நீள் பக்கமாக தொடர்ச்சியான விளிம்புகளைக் காணலாம்.

தேவையான விதை

ஹெக்டயரொன்றிற்க்கு 6 கி.கி

நடுகைக் காலம்

காலபோகம் ஒக்டோபர் - நவம்பர்

சிறுபோகம்   ஏப்ரல் - மே

நடுகை  இடைவெளி

1.5 மீற்றர் x 1 மீற்றர்

நடல்

ஒவ்வொரு குழியிலும் 3 விதைகள் வீதம் 2 - 3 ச.மீ அழத்தில் நடலாம். இவ்விதைகளுக்கிடையே சிறிது இடைவெளி  இருத்தல் வேண்டும். விதைகள் முளைத்து 2 வாரங்களின் பின் இரு நாற்றுக்களை மீதமாக விட்டு ஏனையவற்றைப் பிடுங்கி விடவும். விதைகளை நட முன் ஓர் இரவு முழுவதும் நீரில் ஊற விடவும். இதனால் அவை விரைவில் முளைக்கும்.

இதனைத்தவிர பொலித்தீன் பைகளில் நடுகை செய்தும்  நடலாம். இதனால் மோசமான காலநிலையில் விதைகளை நடுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

கொடிகளைப் படரவிடல்

விதைகளை நட்டு 3 வாரங்களின் பின்னர் 2 மீற்றர் உயரமான பலமான பந்தல்களை அமைக்க வேண்டும். இப்பந்தல்களில் கொடிகளைப் படர விடவேண்டும். பந்தலிற்குக் கீழே பிரதான தண்டில் உருவாகும். கக்கஅரும்புகளை ஒடித்து விடவும்.

பசளை இடல்

குழிகளுக்கு இடப்படும் சேதனப் பசளைகளைவிட கீழ்க் குறிப்பிட்டவாறு இரசாயணப் பசளைகளை இடவும்.

 

யூறியா

கி.கி / ஹெ

முச்சுப்பர் பொசுபேற்று

கி.கி / ஹெ

மியுறியேற்றுப்

பொட்டாசு கி.கி / ஹெ

அடிக்கட்டுப்  பசளை

75

200

65

விதை முளைத்து 4 வது வாரம்

75

-

65

விதை முளைத்து 8 வது வாரம்

75

-

65

 

நீர்ப்பாசனம்

பயிருக்குத் தேவையான அளவு மண்ணில் ஈரம் இருக்கத்தக்கவாறு, தேவையான போது நீரூற்றவும். தேவையில்லாமல் நீரைத் தேங்க விடக் கூடாது. இதனால் பயிர் பாதிக்கப்படும். உலர் காலத்தின் போது கொடியின் அடியைச்  சுற்றி பத்திரக்கலவை இடவும்.

களைகளைக் கட்டுப்படுத்தல்

பயிரின்  ஆரம்பத்தில் கொடிகளுக்கு அண்மையில் காணப்படும் களைகளைக் கையால் பிடுங்கி அழிக்கவும். பயிர் வளர்ந்த பின் கொடிகளுக்குச் சேதம் ஏற்படாதவாறு மண் வெட்டியால் கொத்தி களையைக் கட்டுப்படுத்தவும்.

பீடைகள்

பழ ஈக்கள்

காய் விருத்தியடையும் போது எப்பருவத்திலும் இதன் தாக்கம் ஏற்படலாம். இதன் குடம்பிகள் (புழுக்கள்) காயின் உட்புறத்தைச் சேதப்படுத்துவதால், காய் அழுகும்.

கட்டுப்பாடு

இப்பூச்சி மண்ணின் மேற்பரப்பிலேயே கூட்டுப்புழுவாகும். எனவே, கொடிகளுக்கு அண்மையில் உள்ள மண்ணின் மேற்பரப்பைக் கிளறியால் கிளறிவிடல் வேண்டும். பாதிக்கப்பட்ட காய்களைப் பிடுங்கி அழித்துவிடவும்.

காய்கள் இளமையானதாக இருக்கும் போதே அவற்றிற்கு பொலித்தீனால் அல்லது தடித்த கடதாசியால் உறையிடல் வேண்டும். உறையின் உள்ளே அதிக வெப்பமாக இருந்தால் காய்கள் பாதிக்கப்படும். எனவே உறையின் கீழ்ப்புறம் திறந்ததாக இருத்தல் வேண்டும். எப்பருவத்திலும் இதன் தாக்கம் ஏற்படலாம். இதன் குடம்பிகள் (புழுக்கள்) காயின்  உட்புறத்தைச் சேதப்படுத்துவதால், காய் அழுகும்.

இப்பீடையைக் கட்டுப்படுத்த நாசினிகளை விசிறுவதாயின் பென்தியோன் 50% ஈ.சி என்னும் இரசாயனத்தைப் பூக்கள் உருவாகும் போதே விசிறல் வேண்டும். ஹெக்டயருக்கு 1050 - 1400 மி.லீ போதுமானது. நீருடன் இதனைக் கலக்கும் போது ஒவ்வொரு லீற்றர் கலவைக்கும் 25 கிராம் சீனியையும் சேர்க்கவும். இந் நாசினியை விசிறி 1 நாட்கள் வரை காய்களை அறுவடை செய்ய வேண்டாம்.

அவுலகபோரா வண்டு

இலையில் துளைகள் காணப்படும். நிறையுடலி இலை, பூக்கள், காய்களில் பாதிப்பை ஏற்படுத்தும் இதன் குடம்பி நாற்றுக்களை பாதிக்கும். நடுவதற்கு முன்னர் காபோபியூரான் 3%  G  4 கிராமை ஒரு குழிக்கு இட்டு குடம்பியை கட்டுப்படுத்தலாம்.

எபிலக்ணா வண்டு

நிறையுடலி குடம்பி என்பன இலையை உண்ணும்

கொப்புள ஈ

குடம்பியால் கணுக்களுக்கிடையில் கொப்புளம் உருவாகும் தண்டைப் பிளந்து குடம்பியை அகற்றலாம். அல்லது காபோரில் 85% இல் 2 கி. கிராமை ஒரு ஹெக்டயாருக்கு இடவும்.

துடுப்புக்கால் மூட்டுப்பூச்சி

இப்பூச்சியின் குடம்பி பாகல் கொடிகளில் இருந்து சேதம் விளைவிப்பதால் அதன் வளர்ச்சி தடைப்படும், புழு சேதம் விளைவித்துள்ள பகுதியை கொடியில் கவனமாகப் பிளந்து குடம்பியை அகற்றவும். தாக்கம்  அதிகமாக இருக்குமாயின் காபறில் 85% என்னும் பூச்சி நாசினியில் 4.5 கிராமை ஒரு லீற்றர் நீருடன் கலந்து விசிறவும்.

நோய்கள்

தூள் பூஞ்சண நோய்

இலை மஞ்சலாகும். வெண்ணிறமான பூஞ்சண வித்திகளை  இலையின் இருபக்கமும் அவதானிக்கலாம். காவிப் பயிர்களை அழிப்பதன் மூலமும் பெனோமில் போன்ற பங்கசு நாசினியைப் பயன்படுத்தியும்   இதனை கட்டுப்படுத்தலாம்.

மென் அழுகல்

தண்டின் அடி மண்ணின் அருகிலுள்ள பழங்களில் மென்மையான நீர்தன்மையான அழுகல் ஏற்படும்.

இதனைக் கட்டுப்படுத்த மேலதிக நீரை அகற்றவும். மண்ணை ஐதாக்கி காற்றோட்டத்தை அதிகரிக்கவும் சிபாரிசு செய்யப்பட்ட பங்கசு நாசினியை விசிறவும்.

கீழ்ப்பூஞ்சணநோய்

இலையின் மேற்பரப்பில் மஞ்சள் நிறமான முக்கோண வடிவான புள்ளிகள் தோன்றும். இப்புள்ளி பின்னர் கபில நிறமாக மாறும். சாம்பல் -வெண்ணிறமான பூஞ்சண வித்திகள் இலையின் கீழ்ப்புறம் உருவாகும். இதற்கு சிபாரிசு செய்யப்பட்ட பங்கசு நாசினியை விசிறவும்.

சித்திர வடிவ வைரசு நோய்

பச்சை, மஞ்சள் நிறமான புள்ளிகள் இலையில் தோன்றும். கொடிகளின் வளர்ச்சி தடைப்படும், நோயை அவதானித்த உடன் கொடியைப் பிடுங்கி அழித்துவிடவும்.

அறுவடை செய்தல்

நன்கு முதிர்ச்சியடைந்த காய்களை அறுவடை செய்யவும். பயிர் 60 - 75 நாட்களானதும் முதலாவது அறுவடையைப் பெறலாம். இதன் பின் நான்கு நாட்களுக்கொரு முறை 10 - 14 தடவை அறுவடை செய்யலாம்.

விளைச்சல்

ஹெக்டயருக்கு 20 மெ.தொன் விளைச்சலைப் பெறலாம்.