மரக்கறி நாற்றுமேடை

மரக்கறி நாற்றுமேடை

பெரும்பாலான மரக்கறிப் பயிர்களின் விதைகள் மிகச் சிறயவை. இவ்விதைகள் முதலில் நாற்றுமேடையில் நடப்பட்டு, பின்னர் தோட்டத்தில் நடுவதற்கு உகந்த நாற்றுகள் உற்பத்தி செய்யப்படும். நாற்றுமேடை மூலம் நாற்றுகள் பெறப்படும் பயிர்களாவன கத்தரி, மிளகாய், கறிமிளகாய், தக்காளி, கோவா, பூக்கோவா, லீக்‌ஸ், பீற்றூட், நோகோல், சலாது என்பனவாகும். கரட் விதைகள் மிகச் சிறியவையாக இருந்தாலும், நாற்று மேடையில் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. விளைவாகப் பெறப்படும் கரட் கிழங்கு  ஆணி வேரிலிருந்தே உருவாகும். எனவே ஆணிவேர் பாதிப்புறும்போது விகாரமடைந்த  கிழங்குகளே உருவாகும். இதனை சந்தையில் விற்பனை செய்ய முடியாது. எனவேதான் கரட் நாற்று நடப்படுவதில்லை. இதைத் தவிர பெரிய விதைகளுக்கும், சில விசேட காரணங்களுக்காக விசேட நாற்றுமேடை முறைகளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்து கொள்ள முடியும்.

நாற்றுகள் இளமையானதாக இருக்குபோது அவற்றை இலகுவாக பராமரித்தல், அதிக எண்ணிக்கையான, வீரியமான ஆரோக்கியமான நாற்றுக்களைப் பெறக் கூடியதாய் இருந்தால், தோட்டத்தில் நேரடியாக நடுவதற்குத் தேவையானவற்றை விட  குறைநதளாவான விதைகள மூலம் தேவையான நாற்றுக்களைப் பெறுக்கூடியதாய் இருந்தல் போன்றவற்றை நாற்றுமேடையில் நாற்றுக்களை உற்பத்தி செய்வதில் உள்ள நன்மைளாகக் கருத முடியும்.

பிரதான மரக்கறி நாற்றுமேடை வகைகள்

மரக்கறி நாற்றுக்களை பல வகையான நாற்றுமேடைகளின் மூலம் உற்பத்தி செய்யலாம். அவை தயாரிக்கப்படும் முறைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை இரண்டு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

நாற்றுமேடையை ஒரிட்டத்தில் ஸ்தாபித்தல்

உ+ம்  உயர் பாத்தி, தாழ்ந்த பாத்தி

நாற்றுமேடை ஊடகத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் நாற்றுமேடைகள்

உ+ம் நொரிடோக்கா (துண்டு) நாற்றுமேடைபைகளில் தயாரித்தல், பெட்டி நாற்றுமேடை, தட்டுகளில் தயாரிக்கப்படும் நாற்றுமேடை, கழிவுப்பொருட்களில் (யோகட், கோப்பை, சிரட்டை, டின்) தயாரிக்கப்படும் நாற்றுமேடைகள். தற்போது பெரும்பலான மரக்கறிச் செய்கையாளர்கள் உயர்பாத்தி நாற்று மேடைகளையே பரவலாகப் பயன்படுத்து கின்றனர். நொரிடோக்கா நாற்றுமேடை மலைநாட்டுப் பகுதிகளில் சில விவசாயிகளிடையே பிரபல்யமடைந்துள்ளது. கூடாரங்களில் செய்கை பண்ணும் தொழில் நுட்பங்களுடன், நாற்றுமேடைத் தட்டுகளில் தயார் செய்யப்படும் நாற்றுமேடைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நிலத்தில் நாற்றுமேடையைத் தயாரித்தல்

பொருத்தமான இடத்தைத்தெரிவு செய்தல்

அதிக எண்ணிக்கையான  ஆரோக்கியமான, வீரியமான நடுவதற்கு உகந்த நாற்றுக்களை அதிகளவில் பெற்றுக்கொள்வதற்கு உகந்த இடத்தைத் தெரிவு செய்வது அவசியமாகும்.

நிலத்தைப் பண்படுத்தல்

விதைபதற்கு 3 – 4 கிழமைகளுக்க முன்னர் நாற்றுமேடையை அமைக்க உள்ள இடத்தில் களையைச் சுத்தம் செய்து 20 அங்குல ஆழத்திற்கு உழுது மண்ணைப் புரட்ட வேண்டும். மண்ணைக் கிளறும் போது சிறு கற்கள், களை வேர் என்பனவற்றை அகற்ற வேண்டும். இதைத் தவிர சிதைவடையாத வேர்கள்,பொலித்தீன் போன்றவற்றையும் அகற்றவும்.

முதலாவது தடவை மண்ணைப் புரட்டி ஒரு வாரத்தின் பின்னர் இரண்டாவது தடவை பின், மண்ணை ஈராக்க வேண்டும். இவ்வாறு பல தடவைகள் புரட்டுவதால் அவ்விடத்தில் முளைக்கும் களைகள் அழிந்து விடும். கீழேயுள்ள மண்ணில் சூரி வெளிச்சம் படுவதால் அதில் காணப்படும் நோய்க் கிருமிகளும் அழிந்து விடும். மண்ணை கிளறும்போது நில மேற்பரப்பிற்கு வரும் வெட்டுப்புழு போன்ற  ஆபத்தான மண் வாழ் பீடைகளையும் பொறுக்கி அழிக்கவும்.